தங்கம் காணாமல் போகும். பணம் காணாமல் போகும். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் துப்பாக்கி காணாமல் போகும். முதன்முறையாக 61 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 370 டன் வெடிபொருள் காணாமல் போயிருக்கிறது.
அண்மையில், ராஜஸ்தானில் வேலை நேரம் முடிவதற்குள் வரவில்லை எனக் கூறி தாமதமாக வந்த ரூ.93 கோடி வங்கிப் பணம் வைக்கப்பட்டிருந்த வேனை உள்ளே விடாமல் வெளியே அனுப்பினர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள். நள்ளிரவு வரை நடு ரோட்டில் நின்றது அந்த வேன். உயர் அதிகாரிகள் பேசியபிறகே அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர் வங்கி ஊழியர்கள். நள்ளிரவில் நடு ரோட்டில் 93 கோடி இருப்பது தெரிந்திருந்தால் நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு கொண்டாட்டமாய் போயிருக்கும். நல்லவேளை தெரியவில்லை. இதைவிட மோசமான சம்பவம் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் காணாமல் போயிருப்பது.
ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ் என்ற அரசு நிறுவனத்திடமிருந்து கணேஷ் எக்ஸ்புளோசிவ் நிறுவனம் 370 டன் வெடிபொருட்களை வாங்கியது. ஒரு மாதம் ஆன பிறகும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை. போலீசார் இரவு பகலாய் தேடி வெடிபொருள் ஏற்றிச் சென்ற 4 லாரிகளை கண்டுபிடித்தனர். அதில் வெடி பொருட்களை காணவில்லை. இந்த வெடிபொருட்கள் எங்கே போனது, மீதமுள்ள 57 வெடிமருந்து லாரிகள் என்ன ஆனது, யார் கையில் இவை கிடைத்துள்ளன என பல கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டீஸ்கரிலும் மேற்கு வங்கத்திலும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஒரு காலத்தில் அவர்களிடமிருந்தே நக்சலைட்டுகளால் கொள்ளையடிக்கப்பட்டவைதான். அலட்சியம், அஜாக்கிரதையால் பறிகொடுத்த ஆயுதங்களே அவர்களை பலி வாங்கின. இப்போது காணாமல் போயிருப்பது 370 டன் வெடி மருந்துகள். சட்ட விரோத சுரங்கத் தொழிலிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும்தான் வெடிமருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆயுதங்கள், வெடிமருந்து போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். அப்படி அளித்திருந்தால் இத்தனை லாரிகளும் காணாமல் போயிருக்காது.
0 comments:
Post a Comment