காதலுக்கு கண் கிடையாது என்பது உண்மைதான். அழகு மட்டும் பார்த்து வருவதில்லை காதல் என்பதற்காக சொன்ன வார்த்தை இது. ஆனால் பார்க்காமலேயே இன்டர்நெட் மூலம் பழகி, காதலாகி, கசிந்துருகி கடைசியில் தற்கொலை வரை போய்விட்டது திருச்சியை சேர்ந்த இளம்பெண்ணின் காதல்.
மூத்த பெண் காதலித்து மணந்த கோபத்தில் இருக்கும் தந்தைக்கு, இரண்டாவது மகளும் காதலிப்பது தெரியவர குடும்பத்தையே கைவிட்டு போய் விடுகிறார். ஆதரவற்ற அம்மாவும் பெண்ணும் கோவைக்கு சென்று தனியாக வாழ்கின்றனர். வீட்டிலேயே கம்ப்யூட்டர் வைத்து ஜாப் ஒர்க் செய்து கொடுக்கிறார் பெண். இதற்காக அடிக்கடி இன்டர்நெட் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போது அறிமுகம் ஆன வாலிபருடன் பார்க்காமலேயே காதல் ஏற்படுகிறது. மணிக் கணக்கில் இருவரும் சாட் செய்து மகிழ்ந்துள்ளனர். தாயும் இந்தக் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, இரவும் பகலும் பேசி காதலை வளர்த்துள்ளனர். கல்யாணக் கனவில் மிதந்தவருக்கு திடீரென அதிர்ச்சி. பெற்றோர் சம்மதிக்காததால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என இன்டர்நெட் காதலன் மறுத்து தொடர்பை துண்டிக்கவும் வாழ்க்கையே வெறுத்துப் போகிறது அந்தப் பெண்ணுக்கு. காதல் தோல்வியை தாயிடம் சொல்ல இருவரும் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இனி தற்கொலைதான் ஒரே முடிவு என கை நரம்பை வெட்டி தற்கொலைக்கு முயல்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் உயிர் போகாததால், காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். காஸ் வெடித்து உடலில் தீ பரவி துடித்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காதல் படுத்திய பாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் இருவரும்.
தந்தை இல்லாத குடும்பத்தில் ஆதரவில்லாத நிலையில், இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் திருமணம் என்ற அளவுக்கு போனதால் மிகுந்த நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. பார்த்து பழகிய காதலே பறந்து போய்விடும்போது, பார்க்காத காதல் எத்தனை நாளைக்கு வரும்? ஒரு நாள் அதுவும் பணால் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் வாழ்க்கையே சூன்யமாகி விட்டதாக நினைத்த தாயும் மகளும் தற்கொலையை தேர்வு செய்துள்ளனர். தங்கள் தற்கொலைக்கு காரணமாக இன்டர்நெட் காதலன், காதலுக்கு உதவாத அக்கா, அவரது கணவர் என 20 பேர் பெயரையும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர். குடும்பம் சிதையும் போது, குணமும் சிதையும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
0 comments:
Post a Comment