ஹாங்காங்கில் இருந்து மணிலாவுக்கு சுற்றுலா சென்ற எட்டு சீனர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். உபயம்: பிலிப்பைன்ஸ் போலீஸ்.
மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு போலீஸ்காரர் டிஸ்மிஸ் ஆனார். மீண்டும் வேலை கேட்டார். தராவிட்டால் சுற்றுலா பயணிகளை சுட்டுத் தள்ளுவேன் என்று சொல்லி, அவர்கள் சென்ற பஸ்ஸை துப்பாக்கி முனையில் கடத்தி சாலையின் குறுக்கே நிறுத்தினார். தகவல் தெரிந்து டெலிவிஷன் செய்திக்குழுக்கள் திரண்டன. போலீஸ் தடுக்காததால், மும்பையில் நாம் பார்த்ததை போன்ற நேரடி ஒளிபரப்பு ஆரம்பமானது.
கடத்தல்காரனின் தம்பி வந்தார். அவரும் போலீஸ். துப்பாக்கி வைத்திருந்தார். தம்பிக்கு உதவ வந்திருப்பதாக அவரை தள்ளிக் கொண்டு போனது போலீஸ். இதை டீவியில் பார்த்த கடத்தல்காரன் ஆத்திரம் அடைந்து சில பயணிகளை சுட்டார். அதிரடிப்படை வந்தது. பஸ் உள்ளே எப்படி நுழைவது? கோடரியால் வெட்டினர். ஜன்னல் கண்ணாடியில் கீறல்தான் மிச்சம். சிரமப்பட்டு துளை போட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து காத்துக் கொள்ள முகமூடி இல்லாததால் உள்ளே நுழையவில்லை. குண்டு துளைக்காத ஜாக்கெட் இல்லாததால் எவருக்கும் துணிச்சல் வரவில்லை.
எல்லா பயணிகளையும் கடத்தல்காரன் கொன்றபின், போலீஸ் சரமாரியாக சுட்டதில் ஒரு குண்டு பாய்ந்து கடத்தல்காரன் காலி. அது தெரியாமல் காத்திருந்தனர். 11 மணி நேரம் ஆனபின் வருவது வரட்டும் என பஸ்ஸுக்குள் புகுந்தபோது சடலங்கள்தான் கிடந்தன.
வெட்கக்கேடு என்று நாடே குமுறுகிறது. சிரிப்பு போலீஸ் என்று மீடியா கிண்டலடிக்கிறது. பிலிப்பைன்ஸ் போலீஸ் ஊழலுக்கு பிரசித்தம். சம்பாதிக்கலாம் என்பதால் பணம் கொடுத்து சேர்கின்றனர். வளமான இடத்தில் போஸ்டிங் வாங்க மீண்டும் லஞ்சம். வழக்கில் சிக்காமலிருக்க தொடர்ந்து லஞ்சம். அரசியல்வாதிகள் தில்லுமுல்லுக்கு துணை நின்று பதவியை தக்க வைப்பது. இதுதான் நடைமுறை. இதற்கு முடிவு கட்ட பல குழுக்கள் போராடுகின்றன.
சட்டம் ஒழுங்கை பராமரித்து பொதுமக்களை காக்க உருவான அமைப்பை அடியாள் பாசறையாக மாற்றினால் அதற்கான விலையை கொடுத்துதானே ஆகவேண்டும். அது அப்பாவி உயிர்களாக அமைவதுதான் துரதிர்ஷ்டம்.
0 comments:
Post a Comment