Friday, August 27, 2010

ஒருவேளை சாப்பாட்டுக்கு 3 நாள் காத்திருப்பு

 ரேஷன் கடையில் ஆரம்பித்து மத்திய, மாநில அரசுகளின் குடோன்கள் வரையில் மழை காலத்தில் தண்ணீர் புகுந்து அரிசி, கோதுமை மூட்டைகள் சொட்டச் சொட்ட நனைந்து வீணாகும் அனுபவம் நமக்கு புதிதல்ல. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏழைகள் சோறு கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அரசு கிடங்குகளில் உணவு தானியங்கள் வீணாகின்றன என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2 வாரம் முன்பு இதை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ‘உணவுக் கழக குடோன்களில் சேமித்துவைக்க போதுமான இடம் இல்லாததால் ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் கெட்டுப் போவது வேதனையாக இருக்கிறது. இடம் இல்லாமல் அழுகிப்போகிறது என்றால், எதற்காக குடோன்களிலேயே வைத்திருக்கிறீர்கள்? பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு அதை சும்மா கொடுக்காலாமே’ என்று கேட்டு அரசுகள் முதல் அதிகாரிகள் வரையில் ஒரு பிடி பிடித்தனர் நீதிபதிகள். பெரிய குடோன் கட்டுங்கள். ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் தாராளமாக கிடைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காமல் ஒரு கிராமமே திண்டாடுகிறது என்பதும் சாப்பாட்டுக்காக அந்த கிராமத்தில் பலரும் கோதுமை திருடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலத்தில் மலை ஜாதியினர் வசிக்கும் மீராப்பூர் கிராமம்தான் அது. கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என எதுவுமே இங்கு இல்லை.
படிப்பறிவு இல்லாததால் வேலை கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். அப்படியே வேலை பார்த்தாலும் சொற்ப வருமானம்தான். 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு 6 சப்பாத்தி தயாரிக்க மட்டுமே கூலி போதுமானதாக உள்ளது. அரசு கிடங்குகளிலும் கடைகளிலும் கோதுமை திருடி கைதாகும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கின்றன.
ஊரின் நிலைமை பற்றி ஒரு பெண் கூறுகையில், “குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. கணவனுக்கு மட்டும், அதுவும் சில நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. கூலியும் குறைவாகவே தருகிறார்கள். அவர் கொண்டு வரும் பணம் சமைக்கக்கூட போதவில்லை. 3 நாட்களுக்கு ஒருமுறைதான் சாப்பிட முடிகிறது. இன்று மதிய உணவு சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்துதான் மதிய உணவு சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு சோறுகூட தர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger