பட்ட காலிலேயே படும் என்பார்கள். காஷ்மீர் விஷயத்தில் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே வன்முறை, கலவரம், துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என ரணகளமாக இருக்கும் காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே மாவட்டம் பேய் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 600 பேரைக் காணவில்லை என லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் மிகவும் ரம்மியமான பகுதி லே மாவட்டம். இதனாலேயே எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். காஷ்மீரே பற்றி எரிந்தாலும் எந்தப் பிரச்னை இருந்தாலும் இந்தப் பகுதி மட்டும் அமைதியாக இருக்கும். இந்தப் பகுதியின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் சுற்றியே இருப்பதால், அவர்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் உள்ளூர் மக்கள் விரும்புவதில்லை. யார் கண் பட்டதோ திடீர் பேய் மழையில் சிக்கி சீரழிந்து விட்டது லே மாவட்டம். இந்தப் பகுதி முழுவதும் மண்ணால் கட்டப்பட்ட வீடுகள்தான். அதுவே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பனிக் கட்டியுடன் பெய்த பேய் மழையில் இந்த மண் வீடுகள் கரைய பல கிராமங்கள் சேற்றில் மூழ்கிவிட்டன. சாலைகளில் முழங்கால் அளவுக்கு சேறும் சகதியுமாய் இருக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதாலும் மீட்புப் பணிகள் முடங்கிப் போய் கிடக்கிறது. ஊரை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் அங்கேயே தங்கி மீட்புப் பணிகளில் மனித நேயத்துடன் உதவி வருவது நெகிழ்ச்சி தருகிறது.
தெருவெங்கும் சகதி. அதில் சிக்கித் தவிக்கும் லாரிகள், கார்கள், பஸ்கள். முழங்கால் ஆழம் உள்ள சேற்றில் தட்டுத் தடுமாறி புகலிடம் தேடி போகும் மக்கள் என எங்கு பார்த்தாலும் சோகம். ஒட்டுமொத்த கிராமமே சேற்றில் மூழ்கியதால் உயிர் பிழைத்தவரும் இல்லை, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவும் ஆளில்லை. கார்கில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களையும் காணவில்லை. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எல்லையில் இருந்த பாகிஸ்தான் வீரர்களும் இதில் பலியாகி இருக்கலாம் என்கிறார்கள். நாடுகளுக்குத்தான் எல்லை. இயற்கைக்கு இல்லை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment