Tuesday, August 17, 2010

பாகிஸ்தானில் பேரழிவு

 வாழ்நாளில் இதுபோன்ற பேரழிவை பார்த்ததே இல்லை என்று ஐ.நா சபையின் தலைமை செயலாளர் பான் கி மூன் கூறியிருக்கிறார். சிலர் எதையும் பெரிதாக செய்வார்கள்; சிலர் பெரிதாக பேசுவார்கள். மூன் எந்த ரகம் என்பதை சொல்ல தேவையில்லை.
என்றாலும் பாகிஸ்தானின் மழை வெள்ள நாசம் உண்மையில் மிக மோசமான நிகழ்வு. 80 ஆண்டுகளில் கண்டதில்லை என்று ஒரு அமைச்சர் கூறினார். இந்தியாவில் இருந்து பிரிந்து 63 ஆண்டுதான் ஆகிறது. அதற்கு முன் பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்தை நினைத்து சொல்கிறார் போலும். ஐந்து நதிகள் பாயும் பூமி ஆதலால் சூடிய பெயர் பஞ்சாப். உள்ளதில் பெரிது சிந்து நதி. அதன் வெள்ளம் மட்டும் ஆயிரம் உயிர்களுக்கு மேல் பலி கொண்டுள்ளது. இரண்டு கோடி மக்கள் வீடிழந்திருக்கின்றனர். பல லட்சம் பேரை வேறிடம் அழைத்துச் செல்கிறது அரசு.
சில இடங்களில் சிந்து நதியின் அகலம் 15 மைலாக & 24 கி.மீ. & விரிந்திருப்பதாக சேதங்களை பறந்து சென்று பார்வையிட்ட பிபிசி நிருபர்கள் பதறுகின்றனர். ஊர்கள் மிதந்தாலும் குடிக்க தண்ணீர் இல்லை, வயிற்றுக்கு உணவில்லை, நோய்க்கு மருந்தில்லை. காலரா பரவுகிறது. இந்த அழிவில் இருந்து மீள நீண்டகாலம் ஆகும். இன்னும் மழை ஓயாததால் நிவாரண பணிகள் வேகம் பிடிக்கவில்லை. ஐ.நா கேட்ட அளவில் சர்வதேச உதவியும் குவியவில்லை. ஆப்த நண்பனும் உலகின் புதுப்பணக்கார நாடுமான சீனாவே சில்லறை உதவிதான் அறிவித்துள்ளது.
இந்தியா 50 லட்சம் டாலர் கொடுப்பதாக அறிவித்தது. அதை வாங்காதே என அங்கே தலையங்கம் எழுதுகின்றனர். ஏன்? ‘வெள்ளத்துக்கு காரணமே இந்தியாதான். தனது பகுதியில் பல அணைகளை கட்டி, ஒன்று தண்ணீர் திறந்துவிடாமல் பாகிஸ்தானை பாலைவனம் ஆக்குகிறது; அல்லது இப்படி மொத்தமாக திறந்துவிட்டு வெள்ளத்தால் அழிக்கிறது. செய்வதையும் செய்துவிட்டு நல்லவன் போல் நன்கொடை தருகிறது’ என்கின்றனர்.
பூகம்பம் நிகழ்ந்தபோது இந்தியா மீது பழி போட்டது இதே அறிவாளிகள். ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் போதெல்லாம் இப்படி நம்பவே முடியாத கட்டுக் கதைகளை பத்திரிகைகள் மூலம் பரப்புவது பாகிஸ்தானில் வாடிக்கை.

1 comments:

Robin said...

////கேரளாவைச் சேர்த்த எம்.ஜி.ஆரை, புரட்சித் தலைவர் என்று தமிழ் மக்கள் கொண்டாடியதையும் அவரை முதல்வராக்கி அழகு பார்த்ததையும் யாரும் மறக்கக் கூடாது’’ என்றார்.// மனசாட்சியுள்ள ஆளு!// உண்மையா? :)

Related Posts with Thumbnails
 

Blogger