அமெரிக்க இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். பெற்றோர் இந்த செய்தி பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
ஐபாட், எம்பி3 கருவிகளை காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் கேட்பதுதான் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த போர்ட்டபிள் சாதனங்களால் செவித்திறன் பாதிக்கப்படுவதாக இதுவரை ஆய்வுகள் கூறவில்லை; வெறும் சந்தேகம் மட்டும் கிளப்பின. இப்போது நடந்திருப்பது விரிவான நீண்டகால ஆய்வு. கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது ரிப்பேராம்.
ஒலி அளவு 85 டெசிபலுக்கு மேல் போனால் செவித்திறன் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இயர்ஃபோன் மூலம் காதுக்குள் செல்லும் ஒலிதான் என்றில்லை; ஆரன் அடிப்பது, கட்டடம் இடிப்பது, சுவரில் துளை போடுவது, தெருநாய் குரைப்பது என்று பல வழிகளில் காது பாதிக்கலாம். என்றாலும் 12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களின் வருகைக்கு பிறகுதான். அவர்கள் மெல்லிசை கேட்பதில்லை. ராக், பாப், ஜாஸ் என்று உச்சத்தில் ஒலிக்கும் இசை. இதனால் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு நிரந்தரமானது என்பது இவர்களுக்கும் தெரியாது, பெற்றோரும் உணர்வதில்லை.
கணக்கில்லாத பாடல்களை பதிவு செய்து கேட்கக்கூடிய எம்பி3 சாதனங்களில், ஒலியின் அளவை அறியும் வசதியை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தருவதில்லை. இந்த நிலையில் பெற்றோர் எப்படி உதவ முடியும்? மூன்றடி தள்ளி நின்றாலும் பாட்டு கேட்கிறது என்றால் அது அபாய ஒலி என்று குறைக்க சொல்லலாம். இண்டிகேட்டர் இல்லாவிட்டால், முழு வால்யூமுக்கு ஏற்றி அதில் பாதியாக குறைத்து கேட்க சொல்லலாம். அரை மணிக்கு ஒரு சிறிய இடைவெளி விட்டு காதுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
பார்வை இழப்பைவிட செவித்திறன் குறைவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்க அரசு இதற்காக பிரசார இயக்கம் நடத்த திட்டமிடுகிறது. செல்போன் இசையில் மூழ்கும் இந்திய இளைஞர்களுக்கும் இது அபாயச் சங்கு.
0 comments:
Post a Comment