அலுவலகத்தில் அதிகாரிகள் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக இந்தியாவில் 26 சதவீதம் பேர் கூறுகின்றனர் என்கிறது ஒரு சர்வதேச சர்வே.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது ‘இப்சாஸ்’ ஆய்வு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்ரிக்கா உள்பட 24 நாடுகளில் 12,000 பேரிடம் இந்த நிறுவனமும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இணைந்து ஒரு சர்வே நடத்தின. பணியிடத்தில் உயரதிகாரிகளால் செக்ஸ் உள்பட பல்வேறு வகைகளில் டார்ச்சர் செய்யப்படுவது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தியாவில்தான் இந்த டார்ச்சர் அதிகம் என்பதுதான் சர்வேயில் தெரியவந்துள்ள பகீர் தகவல்.
இதுதொடர்பாக இப்சாஸ் நிறுவன அதிகாரி ஜான் ரைட் கூறியதாவது:
பணியிடத்தில் அதிகாரிகளால் செக்ஸ் டார்ச்சர் அனுபவிப்பதாக கூறுவது இந்தியாவில்தான் அதிகம். உயரதிகாரிகள் தங்களை செக்ஸ் டார்ச்சர் செய்வதாக இந்தியாவில் 26% ஊழியர்கள் கூறுகின்றனர். அடுத்த இடத்தில் சீனா. அங்கு 18 சதவீத ஊழியர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் சவுதி(16%), மெக்சிகோ (13%), தென்ஆப்ரிக்கா (10%), இத்தாலி (9%) ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், ரஷ்யா, தென்கொரியாவில் 8 சதவீத ஊழியர்கள் டார்ச்சருக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலை இல்லை. ஸ்வீடன், பிரான்ஸ் நாடுகளில் மிகமிக குறைவாக, அதாவது 3 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் செக்ஸ் தொந்தரவுகளை எதிர்கொள்கின்றனர். இங்கிலாந்து (4%), ஜெர்மனியிலும் (5%) இது குறைவாகவே உள்ளது.
ஊழியர்களுக்கு அதிகாரிகள் செக்ஸ் டார்ச்சர் தரும் போக்கு கடந்த காலத்தைவிட தற்போது அதிகரித்துள்ளது. அதிலும் 35 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள்தான் அதிக செக்ஸ் டார்ச்சர்களை சந்திக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், அடித்து உதைத்து சித்ரவதை செய்வது, அறைவது, குத்துவது என உடல்ரீதியான டார்ச்சர்களை 7% பேர் அனுபவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment