ஒரேநாளில் இரண்டு சம்பவம். ஒன்று லேட்டாக வந்த மாணவியின் கையில் ஆசிரியை அடித்ததில் கை அழுகிப் போனது. இரண்டாவது சம்பவம் லைட்டர் வைத்திருந்த மாணவனை சிகரெட் குடித்தாயா என ஆசிரியர்கள் சந்தேகப்பட்டு புகார் சொன்னதால் மாணவன் தீக்குளித்து இறந்தது. இரண்டுமே ஆசிரியர்கள் மீது இருக்கும் மரியாதையை கெடுப்பதாக உள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை. தந்தை இல்லாத ஏழைச் சிறுமி, மகளிர் பள்ளி விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்புக்கு தாமதமாக வந்ததால் கோபமான ஆசிரியை பிரம்பால் அடிக்க கையில் காயம் ஏற்படுகிறது. இரண்டு வாரம் கழித்து அதே காரணத்துக்காக மீண்டும் அதே இடத்தில் அதே ஆசிரியை அடிக்க ரத்தக்கட்டு ஏற்பட்டு, சரியாக கவனிக்காததால் கையே அழுகிப் போய்விட்டது. படிக்கப் போன சிறுமிக்கு ஆசிரியையின் ஆத்திரத்தால் கை அழுகிப்போய் எதிர்காலமே துன்பமாகிப் போனது.
கும்பகோணத்தை அடுத்த சிறிய கிராமம் பாலையூர். தந்தைக்கு வெளிநாட்டில் வேலை. தாத்தா வீட்டில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வருகிறான் மாணவன். மாணவர்கள் யாரிடமாவது செல்போன் இருக்கிறதா என பள்ளியில் நடந்த திடீர் சோதனையில் அந்த மாணவனிடம் சிகரெட் பற்றவைக்கும் லைட்டர் இருக்கிறது. சோதனைக் கூடத்தில் தேவைப்படும் என்பதற்காகத்தான் வைத்திருந்தேன் என விளக்கம் சொல்லியிருக்கிறான் அந்தப் பையன். ஆனால் அதை காதில் வாங்காமல் சிகரெட் குடித்ததாக மாணவனிடம் எழுதி வாங்கிக் கொண்டு, பெஞ்ச் மீது நிற்கவைத்துள்ளனர். அதோடு, மறுநாள் வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். நான் சிகரெட் குடிக்க மாட்டேன் என எவ்வளவோ மறுத்திருக்கிறான் மாணவன். நம்பவே இல்லை ஆசிரியர்கள். வெறுத்துப் போன மாணவன் வீட்டுக்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துவிட்டான். பதறிப்போன ஆசிரியர்கள் மருத்துவமனை சென்று பார்த்திருக்கிறார்கள். இப்பவாது என்னை நம்புங்க சார், நான் சிகரெட் குடிக்க மாட்டேன் என மாணவன் கதற, கண்கலங்கியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். சிறிது நேரத்தில் இறந்துவிட்டான் மாணவன்.
கோபம், அவநம்பிக்கை இரண்டும் அடுத்தவரை உயிரோடு கொல்லும் ஆயுதங்கள். மாணவன் , ஆசிரியர் இடையேயான உறவு இந்த இரண்டையும் கடந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாததால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது.
0 comments:
Post a Comment