நாளைய தினம் ஆடிப்பூரம்.ஆடிப்பூரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆடிமாதம் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை யோகத்தில் நளவருடம் சனிக்கிழமை, சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாள் அது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்துக் கொண்டிருந்தார். திடீரென குவா குவா சத்தம். புதர் போல மண்டியிருந்த இடத்துக்கு சென்றவர், துளசி செடியின் அருகே கை, கால்களை உதைத்துக்கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டினார். அன்புடனும் பாசத்துடனும் தனது மகளாகவே கருதி வளர்த்து வந்தார்.
சிறு வயதில் இருந்தே கோதைக்கு ஆண்டவன் மீது மிகுந்த பக்தி. சகல சாஸ்திர ஞானங்களையும் கற்றுத் தேர்ந்தாள். இதற்கிடையில், பரந்தாமன் மீதான பக்தியானது காதலாக மாறியது. கண்ணனை தன் மணாளனாக நினைக்க ஆரம்பித்து கனவிலேயே காதல் செய்து வந்தாள்.
வயதான போதிலும், நந்தவனத்தில் பூ பறித்து பெருமாளுக்கு சாற்றும் திருப்பணியை பெரியாழ்வார் விடவில்லை. ஆண்டவனுக்கு அணிவிப்பதற்காக மாலை கட்டி வைத்திருப்பார். தந்தைக்கு தெரியாமல் அங்கு வரும் கோதை, ‘என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலைதானே. நான் அணிந்துவிட்டு கொடுத்தால்தான் என்ன’ என்று நினைப்பாள். அதை அணிந்து அழகு பார்ப்பாள் கோதை. மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவாள். இது பல நாட்கள் தொடர்ந்தது.
ஒருநாள். பகவானுக்கு சாற்ற இருக்கும் மாலையை கோதை அணிந்துகொண்டிருப்பதை பெரியாழ்வார் பார்த்து பதறிவிட்டார். “அபசாரம்! ஆண்டவனுக்காக தொடுத்துவைத்திருக்கும் மாலை. இதை சூடலாமா?” என்று கடிந்துகொண்டார். அவசர அவசரமா வேறொரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்றிவிட்டு வருகிறார்.
அன்று இரவு. பெரியாழ்வாரின் கனவில் பெருமாள். “கோதை என் மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னாயிற்று?” என்கிறார். கோதையின் பக்தியை உணர்கிறார் பெரியாழ்வார். ஆண்டவனின் உள்ளத்தையே தனது பக்தியால் ஆண்ட கோதை அன்று முதல் ‘ஆண்டாள்’ என அழைக்கப்படுகிறாள். அவள் சூடித் தரும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வருகிறார் பெரியாழ்வார்.
ஆண்டாளுக்கு 15 வயதாகிறது. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் பெரியாழ்வார். “ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவனின்றி வேறொருவரை திருமணம் செய்ய முடியாது” என்கிறாள் ஆண்டாள். குழப்பத்தில் இருக்கும் பெரியாழ்வாருக்கு அப்போதும் வழிகாட்டுகிறான் பரந்தாமன். “அவள் விருப்பப்படியே ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துவா. ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் கனவில்.
பெரியாழ்வாரின் கனவு கலைகிறது. கனவில் இறைவன்தான் கூறியிருக்கிறார் என்றாலும் சற்று குழப்பம். “கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி வந்து சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது? மானிடகுல பெண்ணை சுவாமி எப்படி திருமணம் செய்வார்? என்று பல்வேறு குழப்பங்கள் அடைந்தார்.
ஆனாலும், ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்பதில் ஆண்டாள் உறுதியாக இருந்தாள். தயக்கத்துடனேயே அவளுடன் புறப்பட்டார் பெரியாழ்வார். ஸ்ரீரங்கம் வந்தடைந்ததும் அவருக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி. காரணம் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் பட்டாச்சாரியார்கள் தயாராக காத்திருந்தார்கள். “சாட்சாத் லட்சுமி தேவியே வரப்போவதாக நேற்றுதான் எங்கள் கனவில் பெருமாள் சொன்னார்” என்றார்கள்.
சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. “ஸ்ரீரங்கநாதா” என்று கூறியபடியே கோயில் கருவறைக்கு ஓடுகிறாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி, வடிவாய் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கிறாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரமாகும்.
ஆண்டவனுடன் ஆண்டாள் இரண்டற கலப்பதற்குமுன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை நமக்கு அருளித்தந்துள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இதில் உணர்த்தியிருக்கிறார். இயற்கையின் தத்துவத்தையும் தன் தீஞ்சுவைத் தமிழில் நமக்கு அருளியுள்ளார். இதில் திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம், மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க அருள்புரிந்துள்ளார். நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்துப் பாடல்கள் திருமணப் பாடல்கள். திருப்பாவையையும், வாரணாமாயிரத்தையும் பக்தி சிரத்தையுடன் படிப்பதால் தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும். கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமணம் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.
பக்தியால் இறைவனை நெருங்கி உயர்வு பெற்ற ஆண்டாள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூர திருநாள். வாழ்வில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் இறைவன் அருளையும் பெற இந்நன்னாளில் அவள் பாதம் பணிவோமாக.
0 comments:
Post a Comment