சென்னையை அடுத்த திரிசூலம் மலையில் உள்ள கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து தொழிலாளி ஒருவர் பலியாகி இருக்கிறார். பாறை விழுந்து மற்றொரு தொழிலாளியின் கால் உடைந்து விட்டது. எந்த நேரமும் பாறைகள் விழும் அபாயம் நிறைந்த பகுதியில் எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யப் படாததால் உயிர்ப்பலியும் படுகாயமும் நடந்திருக்கிறது.
குடும்பம், குடும்பமாக கூட்டிவந்து கொத்தடிமைகளாக நடத்துவது, குழந்தைத் தொழிலாளர்கள், தொழில் போட்டியில் எதிரிகளை வெடிவைத்து காலி செய்வது, ஒரு இடத்தில் குவாரி உரிமம் வாங்கிவிட்டு சுத்தி இருக்கும் பல மைல் பரப்புக்கு நிலத்தை ஆக்கிரமித்து சுரண்டுவது என குவாரி தொழிலில் பல தவறுகள் நடக்கின்றன. பண பலம், ஆள் பலம், அரசியல் செல்வாக்கு இருந்தால் மட்டுமே குவாரித் தொழில் செய்ய முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. சட்டத்தைக் காட்டி தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளின் சட்டைப் பையில் பணம் கொட்டப்படுவதால் அவர்களும் எதையும் கண்டுகொள்வதில்லை. கோடி கோடியாய் கொட்டினாலும் குவாரி தொழில் நடக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான குவாரிகள், சுரங்கங்களில் ஓரளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதால், அங்கெல்லாம் விபத்துகள் நடந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் சிறிய குவாரிகளில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. எண்ணிக்கையில் இவைதான் அதிகம். அதனால்தான் உயிர் பலியும் அதிகமாக இருக்கிறது.
தொழிலாளர்கள் பணி நேரத்தில் ஹெல்மெட், தூசி, சிதறும் சிறு கற்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க கண்ணாடி, கைகளுக்கு உறை, கால்களுக்கு ஷூ போன்றவை அணிந்திருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த பாதுகாப்பு சாதனங்களும் குவாரிகளில் வழங்கப்படுவதில்லை. இதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகளில் உயிர் பலி ஏற்படுகிறது. விபத்து நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எந்த வகையிலும் முறையான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. குடும்பத் தலைவரை இழக்கும் அந்தக் குடும்பம் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. திரிசூலம் விபத்து சம்பவத்தில் பலியான தொழிலாளி ஹெல்மெட் அணிந்திருந்தால் ஒரு உயிர் பலியை தடுத்திருக்கலாம். இனியாவது இதுபோல் நடக்காமல் தடுக்க இது பாடமாக அமைந்தால் நன்றாக இருக்கும்.
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment