லஞ்சம் வாங்கியதாக சென்னையில் ஒருவரும் மதுரையில் மற்றொருவருமாக கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு போலீஸ் எஸ்.ஐ.க்கள் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பளம் போதவில்லை என காரணம் சொல்ல முடியாது. சொகுசு வாழ்க்கை, சின்ன வீடு, பினாமி பெயரில் நிலம் போன்ற ஆடம்பர விஷயங்களுக்காகத்தான் இப்படி லஞ்சத்தில் திளைக்கின்றனர் சில போலீசார்.
சென்னையில் சாதாரண மழை நீர் தகராறு. எதிர் வீட்டுக்காரர் புகார் தர, மாஜி ராணுவ வீரரை பேன்ட், சட்டையை கழற்றச் சொல்லி அடாவடி செய்திருக்கிறார் சென்னை எஸ்.ஐ. லோக்கல் போலீசின் பவர் தெரியுமா... என்ற ரீதியில் லெக்சர் அடித்ததோடு, வேலையை காலி செய்து விடுவேன் என மிரட்டி, கடைசியில் மாஜி ராணுவ வீரர் என்பதால் சாதா கேஸ் போட்டு விட்டு விடுகிறேன்... பத்தாயிரம் பணம் கொடு என கேட்டிருக்கிறார். ஏற்கனவே பேன்ட்டை கழற்ற சொன்னதால் நொந்து போயிருந்தவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ய, பணம் வாங்கும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அந்த எஸ்.ஐ.
மதுரையில் இடத் தகராறு. எப்ஐஆரில் உறவினர்கள் பெயரை நீக்கவேண்டும் என ஒருவர் கோரிக்கை வைக்க,3 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார் மதுரை எஸ்.ஐ. இதில் இவருக்கு 2 ஆயிரமாம். ஸ்டேஷன் செலவுக்கு ஆயிரமாம். பணம் கைமாறியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த எஸ்.ஐ. 2003ல் லஞ்சம் வாங்கியபோது கைதானவராம். இப்போது மீண்டும் கைதாகியிருக்கிறார்.
எந்த வேலை பார்த்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, போலீஸ் ஸ்டேஷன் போய் விட்டால் மரியாதையே கிடைக்காது. வாடா, போடா என ஏக வசனம். அரசியல் செல்வாக்கு இருந்தால் உட்கார சீட் கிடைக்கும். இல்லாவிட்டால் ஜட்டியோடு குத்தவைச்சு உட்கார வைப்பார்கள். நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற நிலை இருப்பதால்தான் போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அங்கு போகவே பயப்படுகிறார்கள். அதற்கு கட்டப் பஞ்சாயத்து தேவலை என்று நம்புகிறார்கள். மக்களின் பயத்தை போக்க வேண்டியது அவசியம். அது நேர்மையான போலீசாரால்தான் முடியும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் மக்களுக்கும் போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படும்.
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment