நாளை வரலட்சுமி நோன்பு,இது பற்றி தெரிந்து கொள்வோம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இது அனுபவ உண்மையும்கூட. இந்து மதத்தில் தெய்வங்களுக்காக கடைபிடிக்கப்படும் பல்வேறு விரதங்களும், பூஜைகளும், வழிபாடுகளும் பிரசித்தம். அந்த வகையில் லட்சுமி தேவியை வழிபடுவதற்காக ஏற்பட்ட பூஜையே ஸ்ரீவரலட்சுமி விரதம். பெண்கள், நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டி மாங்கல்ய பலம் அருளும் மகாலட்சுமியை வணங்கி நோன்பு இருந்து வழிபாடு செய்வதே இந்த நாளின் சிறப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரத பூஜை வருகிறது. பாரத நாட்டின் வடக்கே குண்டினபுரம் என்ற கிராமம் (இன்றைய பீகார்) இருந்தது. இந்த ஊரில் வசித்த சாருமதி என்ற பக்தை, கணவனுக்கும் மாமியார், மாமனாருக்கும் உள்ளன்போடு சகல சேவைகளையும் செய்து வந்தாள். வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதிர்ந்து பேசாமல், எல்லாவற்றையும் பொறுமையாக அணுகி சமாளித்து குடும்பம் நடத்தினாள். ஆனாலும் வீட்டில் ஏழ்மை நிலையும், நோய், நொடிகளும், பற்றாக்குறையான வாழ்க்கையே தொடர்ந்தது. எந்த நிலையிலும் மனம் தளராமல் பொறுமையை கடைபிடித்தாள்.
அவளது பக்தி, சேவை, பொறுமையை கண்டு மனமிரங்கிய லட்சுமிதேவி, சாருமதியின் கனவில் தோன்றி, ‘உன் பொறுமைக்கு பரிசளிக்க வந்துள்ளேன். என்னைக் குறித்து விரதம் இருந்து பூஜை செய்தால் சகல பாக்கியங்களையும் அருள்வேன்’ என வரம் தந்து மறைந்தாள். லட்சுமிதேவி சொன்னபடியே சாருமதி விரதம் இருந்து பூஜை செய்து, வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்றாள். அவள் விரதம் இருந்த நாளே வரலட்சுமி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
எப்படி பூஜை செய்வது: இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து, வண்ணக் கோலமிட வேண்டும். மனையில் லட்சுமி படம் அல்லது வெள்ளி லட்சுமி முக உருவத்தை வைத்து மாலை, கதம்ப பூக்கள், தாழம்பூ போன்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். கலசம் வைத்து ஏலக்காய், பச்சை கற்பூரம், அபிஷேக திரவியங்கள் கலந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கலசத்தில் ஊற்றி, அதன்மேல் தேங்காய் வைத்து மாவிலை, மாலை போட்டு வைக்கலாம் அல்லது கலசத்துக்குள் அரிசி, பருப்பு நிரப்பி வைத்தும் பூஜை செய்யலாம்.
பூஜை முறையை பொறுத்தவரை அவரவர் குடும்ப வழக்கப்படி செய்துகொள்ளலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்தியம் படைத்து, கும்பத்தில் மஞ்சள் கயிறுகள் வைத்து லட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். அதன்பிறகு தீபாராதனை காட்டி பூஜைக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜையில் வைத்த மஞ்சள் கயிற்றை தானும் கட்டிக்கொண்டு, மற்ற பெண்களுக்கும் கட்டிவிட வேண்டும். பூஜை முடிந்ததும் லட்சுமிதேவியை குறித்து 108 நாமாவளி சொல்லலாம் அல்லது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். லட்சுமி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
லட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பலம் கூடும். சர்வ மங்களமும், நீண்ட ஆயுள், புகழ், கீர்த்தி, செல்வம், செல்வாக்கு பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.
இந்த பூஜையை சிரத்தையுடன் செய்பவர்களுக்கு ஜாதகத்தில் உள்ள சுக்கிர கிரக நீச்ச தோஷமும், களத்திர தோஷமும் விலகும். திருமண தடை நீங்கும். கணவன், மனைவிடையே உள்ள மனவேற்றுமைகள் மறையும். பலம் வாய்ந்த சுக்கிர திசை நடப்பவர்களுக்கும், யோக சுக்கிரன் அமையப் பெற்றவர்களுக்கும் சகல செல்வ சுகபோகங்கள் கிடைக்கும்.
0 comments:
Post a Comment