சென்னை சாலைகளில் சில நேரங்களில் காதைப் பிளக்கும் சத்தத்துடன், பயங்கர வேகத்துடன் மோட்டார் சைக்கிள்களும், ஆட்டோக்களும் பாய்ந்து செல்வதைப் பார்த்திருப்போம். ‘ஏதோ அவசரம் போல’ என்றுகூட நினைத்திருப்போம். ஆனால் சீப் த்ரில்லுக்காகவும் பரிசு பணத்துக்காகவும்தான் இப்படி உயிரைப் பணயம் வைத்து ரேஸ் விடுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை போலீஸ்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் பெரும்பாலும் இதுபோன்ற பைக், ஆட்டோ ரேஸ் நடக்கிறது. நண்பனுடன், காதலியுடன், மனைவியுடன் என பல பிரிவுகளில் நடக்கும் பைக் ரேஸ், பெரும்பாலும் பீச்சில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரங்களில் பரிசுத் தொகையும் சில நேரங்களில் 10 பவுன், 15 பவுன் செயினும் பரிசாக கிடைக்கும். ஆட்டோ ரேஸிலும் இப்படி பல பிரிவுகள் உள்ளன. இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சூதாட்டமும் நடக்கிறது. இதிலும் பல ஆயிரங்கள் புழங்குகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் பாதுகாப்புக்கு ஹெல்மெட்கூட அணிவதில்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமான வேகத்தில் பறப்பதால் ரேஸின் போது பல நேரங்களில் உயிர்ப் பலியும் நடக்கிறது. அதோடு எதிரே வந்தவர்கள், குறுக்கே வந்தவர்கள் என பலரும் பலியாகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் ஈசிஆர் சாலையில் நடந்த ஒரு விபத்தில் 20 வயது இளைஞன் ஒருவனும் 25 வயது இளைஞன் ஒருவனும் பலியானார்கள். இவர்கள் ரேஸில் பங்கேற்றவர்கள்.
சாலை விதிகளை மீறி இதுபோல் ரேஸ் நடத்துபவர்களை போலீஸ் எச்சரித்துள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வது, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது முதல் சிறைத் தண்டனை அளிப்பது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் போக்குவரத்துக்கு மட்டும்தான். ரேஸ் நடத்துபவர்கள் அதற்கென உள்ள மைதானங்களில்தான் நடத்த வேண்டும். சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிரோடு விளையாட யாருக்கும் உரிமை இல்லை. இதை ரேஸ் பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment