Friday, April 30, 2010

உளவாளியின் கதை

 ஜேம்ஸ்பாண்ட் படங்களை பார்க்கும்போது உலகத்திலேயே ஜாலியான வேலை உளவாளியாக இருப்பதுதான் என்று தோன்றும். மது, மாது, பணம், சூப்பர் கார் என்று வாழ்க்கையின் அத்தனை சுகங்களையும் அனுபவிப்பான் 007. உண்மையில் அப்படி கிடையாது. சுத்தமாக போரடிக்கும் வேலை அது.
மாதுரி குப்தா மாதிரி உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு எதிரி நாட்டுக்கு உளவு சொல்வது அந்த வகையில் சேராது. இது பகுதிநேர பணி. கவுரவம் இல்லாத வேடம். பெண்களை உளவாளியாக பயன்படுத்துவது உலகப் போருக்கு பின்னர் வல்லரசுகள் கையிலெடுத்த உத்தி. இளம்பெண்ணாக வேலைக்கு எடுத்து பயிற்சி அளிப்பதில்லை. நடிகை, டான்சர், இசைக்கலைஞர், விளையாட்டு வீரர் என்று ஏதோ ஒரு துறையில் திறமையானவராக தேர்வு செய்வார்கள். தேசப்பற்று, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். அப்புறம் வழி சொல்லிக் கொடுத்து வசதிகளும் செய்து தருவார்கள். வரி கட்ட தேவையில்லாத வருமானம் கிடைக்கும் என்றால் யாருக்குதான் கசக்கும்? மாட்டிக் கொண்டால் என்ன சொல்லி தப்பலாம் என்பதையும் முதலிலேயே உருவேற்றி இருப்பார்கள்.
இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் செயலாளராக இருந்தவர் மாதுரி. உருது பத்திரிகைகளை படித்து நமக்கு பயன்படக்கூடிய செய்திகளை மொழிமாற்றம் செய்து தருவது அவருக்கு தரப்பட்ட பணி. பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதில் விழுந்துவிட்டார். ஆறு ஆண்டுக்கு முன்பே மாதுரி மதம் மாறிவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகை சொல்கிறது. ஆறு மாதம் முன்னால் அவர் மீது நமது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து கண்காணித்திருக்கிறார்கள். மாட்டிக் கொண்டதும் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்ப பார்க்கிறார்.
மேலதிகாரிகள் அவமதித்த கோபத்தில் எதிரிக்கு வேவு பார்த்ததாக கதை அளக்கிறார். எதிரி நாடுதான் என்றில்லை, நட்பு நாடுகளும் நமது அதிகாரிகளை வளைத்துப் போட்டு உளவாளிகளாக மாற்றுகின்றன. சந்தேக நிழல் விழும்போது ‘காணாமல்’ போவார்கள். அதாவது, வேறு பெயரில் சம்பந்தப்பட்ட நாட்டின் பிரஜையாக மாறியிருப்பார்கள். அப்படி 9 பேரின் பெயர்கள் பிரதமர் பார்வைக்கு போயிருப்பதாக தகவல். இது களையெடுக்கும் காலம்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger