Monday, April 26, 2010

எரிமலை















பேய், பிசாசு, ஆவி.. இதெல்லாம் பயத்தின் அடிப்படையில் மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிற பீதிகள். நிஜமாகவே மனிதனுக்கு மிரட்டலாக இருப்பது இயற்கை சக்திகள்தான். சமீபத்தில் மனித குலத்துக்கு செக் வைத்திருக்கும் தம்மாத்தூண்டு இயற்கைச் சீற்றம் ஐஸ்லாந்து எரிமலை. டன் கணக்கில் தூசியையும் புகையையும் கக்கி சைலன்டாக அது தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க, அதன் தூசுக்கு பயந்து 15 ஆயிரம் விமானங்கள் ‘நங்கூரம் பாய்ச்சி’ நின்றுவிட்டன.
எரிமலை குழம்பு பொங்கிப் பாய்வதால் ஐஸ்லாந்தில் உள்ள பனி உருகி வெந்நீராகி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது என செய்திகள் கூறுகின்றன. எரிமலையின் விளைவுகள் இவை மட்டும்தானா? இன்னும் உண்டா?
இந்த கேள்விக்கு விடை 2 நூற்றாண்டுகளுக்கு முன் உலக வரலாற்றில் இருக்கிறது. இதைவிட பல மடங்கு பயங்கரமான தம்போவா என்ற எரிமலை கடந்த 1815&ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சம்பவா தீவில் வெடித்தது. அந்த எரிமலை கக்கிய புகை மண்டலம் எங்கும் பரவி பூமியில் சூரிய ஒளி விழுவதை தடுக்கத் தொடங்கியது. 1,630 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கர எரிமலை வெடிப்பாக இது கருதப்பட்டது.
1812&ல் கரீபியன் தீவுகளில் உள்ள லா சோபிராரி எரிமலை, அதே ஆண்டில் இந்தோனேஷியாவின் ஷாங்கி தீவில் உள்ள அவு எரிமலை, 1813&ல் ஜப்பானில் உள்ள சுவனோசெஜிமா எரிமலை, 1814&ல் பிலிப்பைன்ஸில் உள்ள மேயன் எரிமலை ஆகியவையும் சீற்றத்துடன் வெடித்து நெருப்புக் குழம்பை கக்கின. ஏற்கனவே இந்த எரிமலைகள் வளிமண்டலத்தில் புகை மண்டலத்தை ஏற்படுத்திய நிலையில், தம்போவா வெடித்ததில் உலகின் தட்பவெப்ப சுழற்சியே நிலைகுலைந்து போனது. எரிமலை புகையில் இருக்கும் கந்தக அமில துளிகள் (நீர்த்துளியைவிட நுண்ணியவை) சூரிய ஒளியை தடுத்தன. சூரிய வெப்பம் குறைந்ததால் பூமியில் குளிர் அதிகரித்தது. காற்று மண்டலத்தின் மேல்பகுதியில் உருவான சல்பர் கூட்டுப்பொருட்களான ஏரோசால் போன்றவை 4 ஆண்டுகள் வரை நிலைத்திருந்து தனது பயங்கர விளைவை பூமியில் காட்டின. சூரிய ஒளியின்றி பயிர்கள் கருகின. உணவின்றி உயிரினங்கள் மடிந்தன. பஞ்சம், பட்டினி போல கொள்ளை நோய்களும் வேகமாக பரவின.
தட்பவெப்பத்தில் ஏற்பட்ட கோளாறு வடகிழக்கு அமெரிக்கா, கனடா, வடக்கு ஐரோப்பா, இத்தாலி, சீனா, ஜப்பான் என உலகின் பல பகுதிகளையும் பாதித்தது. பகல், இரவு என இரு வேளையும் சராசரியாக 20 & 25 டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது. பல இடங்களில் கோடையிலும் பனி கொட்டிய அதிசயம் நடந்தது. வளிமண்டலத்தில் இருந்த எரிமலை புகை மேகத்தில் கரைந்து இத்தாலியில் ரத்தச் சிகப்பு நிறத்தில் உறைபனி பொழிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கோடை காலமே வரவில்லை. வெயிலே அடிக்காமல் காலம்மாறி பெய்த மழை இந்தியாவின் கங்கை கரை பகுதிகளில் காலரா போன்ற கொள்ளை நோய்களை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது.
அதற்குப் பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எரிமலைகள் சீறினாலும் 19&ம் நூற்றாண்டு போல பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. 2010&ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பூமி அடிக்கடி சிலிர்த்துக்கொள்கிறது. ஹைதி, இந்தோனேஷியா, சீனா, ஆப்கன் நிலநடுக்கங்களை தொடர்ந்து தற்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இது சற்று பீதியை ஏற்படுத்தி விமான சேவைகளை ஸ்தம்பிக்க வைத்தது. இதுவும் பொங்கி வெடிக்குமா, சமர்த்தாய் அடங்கிவிடுமா என்பது தெரியவில்லை.
அழிவா, வளர்ச்சியா?
சுமார் 71 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அமைந்துள்ள பகுதியில் பயங்கர எரிமலை வெடித்தது. கந்தக துகள்கள் வான் முழுவதும் பரவியதில் சூரிய ஒளி முழுவதுமாக மறைந்து உலகமே இருளடைந்தது. பூமி வெப்பநிலை 1 டிகிரி செல்சியசுக்கும் கீழே வந்தது. உலகமே ஐஸ்கட்டியாக உறைந்தது. குளிர் தாங்காமல் பல்லாயிரம் உயிரினங்கள் பூண்டோடு அழிந்தன. அதற்கு பிறகு பல புதிய உயிரினங்கள் தோன்றின. மனிதகுலத்திலும் மாபெரும் பரிணாம வளர்ச்சி அப்போது ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தம்போவா எரிமலையின் மாபெரும் சீற்றத்தின்போது விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ் பகுதி மக்கள் உணவைத் தேடி அகதிகளாக வெகு தூரம் பயணித்தனர். ஜெர்மெனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலை ஏற்பட்டது. ஐரோப்பாவை சேர்ந்த பலர் அமெரிக்காவின் மத்திய பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்து புதிய குடியிருப்புகளை உருவாக்கினர். அப்போது போக்குவரத்துக்கு பயன்பட்ட குதிரைகளுக்கு உணவளிக்க முடியாததால் மனிதன் மாற்றுவழியை சிந்திக்க தொடங்கினான். இதன் விளைவாக ‘டேண்டி ஹார்ஸ்’ என்ற புதிய வாகனத்தை ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வான் டிரெய்ஸ் உருவாக்கினார். அதுதான் பின்னாளில் ‘சைக்கிளாக’ மாறியது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger