அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகம், சூதாட்டம், மேட்ச் பிக்சிங், ஏல மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம், மும்பையில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் லலித் மோடி மீதான நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அணிகளை ஏலம் விட்டதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஐபிஎல் சர்ச்சையை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ஐபிஎல் மோசடி குறித்து கம்பெனிகள் விவகாரத்துறை, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் 24 மணி நேரத்துக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என கம்பெனி விவகாரங்கள் துறை கெடு விதித்தது. அணி உரிமையாளர்களின் அலுவலகங்கள், ஐபிஎல் கமிஷனர் அலுவலகம் மற்றும் பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஐபிஎல் அலுவலகத்தில் சோதனை செய்தபோது, வீடியோகான் மற்றும் அடானி குழுமத்தினர் அளித்திருந்த ஏல ஆவணங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய அரசின் 3 துறையினரும் விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன. ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் எனவும் 26 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அண்மையில் கொச்சி மற்றும் புனே அணிகளுக்காக சென்னையில் நடந்த ஏலத்தில் மட்டும் அல்லாது, முதல்முறையாக 2008&ம் ஆண்டு நடந்த 8 அணிகளின் ஏலத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008&ம் நடைபெற்ற ஏலத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போயின. இந்த இரண்டு அணிகளிலும் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியின் உறவினருக்கு பங்கு இருக்கிறது. இதேபோல் மிகக் குறைந்த வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்கியுள்ளார். இவற்றில் மோடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
மற்ற அணிகள் ஏல விஷயத்திலும், அணி உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ஏலத்தை குறைத்து கேட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கார்டெல் அமைத்து ஏலம் கேட்பது மத்திய அரசின் காம்படிஷன் ஆக்ட் 2002&ன் படி குற்றமாகும். இந்தக் கோணத்தில் விசாரணை நடத்த மத்திய அரசின் காம்படிஷன் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் அணிகளில் டெக்கான் சார்ஜர்ஜ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஒரு சில அணிகள் தவிர மற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கு 60 சதவீத பங்குகளே சொந்தம் என்றும், மீதமுள்ள 40 சதவீத பங்குகள் நிழல் நிறுவனங்களுக்கு சொந்தம் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் வெளிநாடுகளில் பதுக்கப்பட் டிருக்கும் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இதன்மூலம் மோடிக்கு பெருத்த ஆதாயம் கிடைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மற்ற சர்ச்சைகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஏல மோசடிகளில் தீவிர கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சர்ச்சையை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடுவது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பி வருவதால் நாடாளுமன்ற குழு அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மும்பையில் நாளை மறுநாள் (26&ம் தேதி) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், ஐபிஎல் கமிஷனர் பதவியில் இருந்து மோடி நீக்கப்படுவது உறுதி என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தை 5 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என லலித்மோடி முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை என்றும் பிசிசிஐ முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்திருந்த மோடி, அதிலிருந்து பின்வாங்கியுள்ளார். பிசிசிஐக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிசிசிஐக்கும் லலித்மோடிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லலித் மோடிக்கு பதிலாக பிசிசிஐ தலைவர் மனோகர், ஐபிஎல்லின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும், லலித் மோடி தொடர்ந்து பிசிசிஐ துணைத் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அணிகள் ஏலத்தில் பல கோடி மோசடி
விசாரணை நடத்த மத்திய அரசு தீவிரம்
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment