அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பரில் இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். நல்வரவு நடக்கட்டும். இரு நாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. கல்வி, வேலை, தொழில், வர்த்தகம் காரணமாக தனிப்பட்ட முறையிலும் அமெரிக்காவுடன் இந்தியர்களுக்கு நீண்டகாலமாக தொடர்பு இருந்து வருகிறது. ஆனாலும் அரசுகள் அளவிலான உறவு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருந்ததில்லை.
உண்மையில், இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்து அமெரிக்க அரசு இந்திய மக்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம். சோவியத் யூனியனுடன் இந்தியா நெருக்கமாவதற்கு அந்த அனுபவம் காரணமாய் அமைந்தது.
உலகளாவிய ராஜதந்திரம் என்ற பெயரில் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் தேவைக்கு அதிகமாகவே அது பாசத்தை பொழிந்ததால், ரஷ்யாவுடன் நெருக்கத்தை குறைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமே நமக்கு அமையவில்லை. அணுகுண்டு சோதனை நடத்தியதை சாக்கிட்டு, நாம் எந்த நாட்டிடமும் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் உயர்நுட்ப எந்திரங்கள், தளவாடங்களையும் வாங்க முடியாதபடி சர்வதேச தடை விழுந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு முதன்மையானது. வட கொரியா, பாகிஸ்தான், லிபியா வரிசையில் இந்தியாவை சேர்த்த பாவத்துக்கு பரிகாரமாக ஜார்ஜ் புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசியில் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அது அமுலுக்கு வர தடையாக உள்ள நிர்வாக சிக்கல்கள் இன்னும் தீரவில்லை. அதே சமயம், ஆப்கனிஸ்தானில் தலிபான்களை ஒழித்து மக்களாட்சி ஏற்படுத்தும் போரில் பாகிஸ்தான் துணை நிற்பதாக கூறி அதற்கு பணமும் ஆயுதங்களும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தவில்லை.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், ‘காஷ்மீரிலும், ஆப்கனிலும், அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் செயல்படும் பயங்கரவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு’ என்ற இந்தியாவின் வாதம் அமெரிக்க அரசுக்கு உறைத்திருக்கிறது. எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேசும்போது ஹில்லரி கிளின்டன் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியேனும் இந்தியாவுக்கு பாதகமில்லாத வகையில் தனது தெற்காசிய கொள்கையை அமெரிக்கா திருத்திக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
1 comments:
இனியேனும் இந்தியாவுக்கு பாதகமில்லாத வகையில் தனது தெற்காசிய கொள்கையை அமெரிக்கா திருத்திக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
Post a Comment