போபால் சம்பவம் நடந்து 26 வருடம் ஆகிறது. தீர்ப்பு வர தாமதம் ஆவது நீதி மறுக்கப்படுவதற்கு சமம். இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள். சொல்லிச் சொல்லி கந்தலாகிப் போனது அது. ‘டூ லிட்டில் டூ லேட்’ என்பது லேட்டஸ்ட் மொழி. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்பது அர்த்தம்.
யூனியன் கார்பைடு அமெரிக்க கம்பெனி. எவரெடி பேட்டரி தயாரிப்பில் பிரசித்தம். போபால் நகரில் பூச்சி மருந்து ஆலை அமைத்தது. அதன் பாதாள கிடங்கில் மெதில் ஐசோசயனேட் என்ற வாயு இருந்தது. இரவில் வால்வ் வெடித்து வாயு கசிந்தது. சுற்று வட்டாரத்தில் காற்றில் கலந்து பரவியது. சுவாசித்தவர்களின் நுரையீரலை தாக்கியதில் 3,500 பேருக்கு மூச்சு நின்றது. அடுத்த நாட்களில் எண்ணிக்கை இருபதாயிரம் ஆனது.
பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி கொலை, சீக்கியர்கள் மீது தாக்குதல் என அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்த ஆண்டு அது. அதற்கு இரு ஆண்டுகள் முன்பு இதே ஆலையில் கசிவு ஏற்பட்டு சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதே குடிசைவாசிகள் வேறு இடங்களுக்கு தப்பியோடி, பிற்பாடு திரும்பி வந்தனர். அன்றும் சரி, ஆலையில் பயங்கர விபத்து நடந்து போபால் நகரமே மயானமாக மாறப்போகிறது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி என்பவர் தொடர் கட்டுரை எழுதி சங்கு ஊதிய போதும் சரி, ஆலையும் அரசும் விழித்துக் கொள்ளவில்லை.
அமைச்சர்கள் ஓய்வு எடுப்பது அந்த ஆலையின் விடுதியில்; ஐ.ஜி ரிடையர் ஆனதும் ஆலோசகர் வேலை; அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு அமோக சம்பளத்தில் பதவி. யார் கேட்பது? ஆலையின் மேல்மட்டத்தில் 12 பேர் மீது சி.பி.ஐ ‘உயிர்ப்பலி நேர காரணமாக இருந்தனர்’ என்று குற்றம் சுமத்தி 10 ஆண்டு தண்டனை கேட்டபோது, ‘கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய’ குற்றமாக அதை மாற்றியது சுப்ரீம் கோர்ட்.
1989ல் 47 கோடி டாலர் கொடுத்து இழப்பீடு பிரச்னையை வழக்கின்றி முடித்தது கார்பைடு நிர்வாகம். உடனே நிர்வாகம் கை மாறியது. தனி மனித வழக்குகளே செல்வாக்குக்கு தகுந்த மாதிரி முடியும் சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவன விவகாரம் இத்தனை காலம் பிழைத்திருப்பதே பெரிது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
0 comments:
Post a Comment