உலகின் மிகப்பெரிய கம்பெனிகளில் ஒன்று வினோதமான தொழிலாளர் பிரச்னையை சந்தித்துள்ளது. அதற்கு என்ன தீர்வு காணப்படும் என்பதை அறிய பன்னாட்டு தொழிலகங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
ஃபாக்ஸ் கான் என்பது நிறுவனத்தின் பெயர். தைவான் நாட்டின் ஹான் ஹய் என்ற தொழில் குழுமத்தின் எலக்ட்ரானிக் உற்பத்தி பிரிவு. ஐபாட், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நிறுவனம். இந்தியா உட்பட ஏழெட்டு நாடுகளில் இயங்குகிறது. சீனாவில் இதன் ஆலைகளில் எட்டு லட்சம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். 90 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் பத்தாவது மாடி, 12வது மாடியில் இருந்து கீழே குதிப்பதுதான் கம்பெனி எதிர்நோக்கும் பிரச்னை. ஐந்து மாதத்தில் 14 பேர் இப்படி உயிரை விட்டிருக்கிறார்கள். விஷயம் மேலை நாடுகளிலும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
ஊருக்கு வெளியே ஆள் அரவம் இல்லாத பொட்டல் காட்டில் பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆலை அமைந்துள்ளது. சீருடை அணிந்து எட்டு மணி நேரம் இடைவிடாத வேலை. தொடர்ந்து நான்கு மணி நேரம் ஓவர்டைம். கட்டாயமில்லை, காசுக்காக. முடிந்ததும் பஸ்களில் ஏற்றி அடுக்கு மாடி ஹாஸ்டலுக்கு பயணம். படுக்கை, உணவு, சம்பளம், இருப்பிடம் எல்லாமே மற்ற நிறுவனங்களை காட்டிலும் சிறப்பானவை. இருந்தும் தற்கொலை ஏன் என்ற விவாதம் நாடெங்கும் நடக்கிறது. சமூக வாழ்க்கைக்கு இடமில்லாத ராணுவ பயிற்சி நிலையம் போன்ற சூழலே காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
‘நகரத்தில் ஆடம்பரமாக வாழலாம் என்ற எதிர்கால கனவோடு கிராமங்களை விட்டு கிளம்பி வரும் வாலிபர்கள், இந்த சூழ்நிலையில் தங்கள் கனவு ஒருநாளும் நனவாகாது என்பதை சீக்கிரமே புரிந்து கொள்கின்றனர். அருகருகே நின்று வேலை செய்தாலும், படுத்து உறங்கினாலும் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசி சிரித்து பழக முடியாத கெடுபிடி இவர்களை விரக்திக்கு தள்ளுகிறது’ என்கின்றனர் நிபுணர்கள்.
வாழ்க்கைச் செலவுக்காக உழைத்து சம்பாதித்த காலம் மாறி, ஓய்வில்லாத உழைப்பே வாழ்க்கையாகும்போது இந்த சோகம் தவிர்க்க முடியாதுதான்.
0 comments:
Post a Comment