Monday, June 7, 2010

என்ன கொடுமை இது!

 வட கிழக்கு மாநிலமான மணிப்பூர், இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் இருந்து எந்தப்பொருளும் மணிப்பூருக்கு வரக்கூடாது என்று நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகலாந்து (என்எஸ்சிஎன்) அமைப்பை சேர்ந்த இரண்டு பிரிவுகளும், சட்ட விரோதமாக பொருளாதார தடை விதித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர் மணிப்பூர் மக்கள்.
மணிப்பூர் மற்றும் அசாமின் ஒரு பகுதியை நாகலாந்துடன் இணைத்து கிரேட்டர் நாகலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் என்எஸ்சிஎன். இது 88ல் முய்வா தலைமையில் ஒன்றும் காப்லாங் தலைமையில் இன்னொன்றுமாக இரண்டாகப் பிரிந்தது. கிரேட்டர் நாகலாந்து கோரிக்கை மட்டுமல்லாமல், ஆள் கடத்தல், மிரட்டி பணம் வசூலித்தல், குரூப் மோதல், கள்ளச் சாராய விற்பனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் இரண்டுக்குமே பொது. இப்போது மாவட்ட கவுன்சில்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு, அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையால் நொநதுபோயுள்ளனர் மணிப்பூர் மக்கள்.
மணிப்பூரில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு. சமையல் காஸ் சப்ளை இல்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. ஒரு லிட்டர் டீசல் ரூ.90க்கும் பெட்ரோல் ரூ.150க்கும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. விவசாயம் அடியோடு படுத்துவிட்டது. கடந்த ஆண்டு தாமதமாக பருவ மழை பெய்ததால் பயிர்கள் அழிந்தன. இந்த முறை டீசல் தட்டுப்பாட்டால் நிலத்தை உழ முடியாமல் தவிக்கின்றனர் விவசாயிகள். முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடப்பதால், உரமும் வரவில்லை. சாலை மறியலை அரசால் முறியடிக்க முடியவில்லை. ஒரு முறை விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மணிப்பூருக்குள் கொண்டு செல்லப்பட்டன. அதோடு அவ்வளவுதான். மறியலை முறியடிக்க ஒரு முறை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். அது கூட நெரிசலில் சிக்கி அவர் பலியானதாக செய்தி வந்தது.
தீவிரவாத அமைப்புகளால் ஒரு மாநிலமே தனித்து, தவித்துப் போயிருக்கிறது. அதுவும் இரண்டு மாதங்களாக. ஆனால் இன்னும் முடிவு வரவில்லை. இது போன்ற நிலை நீடித்தால், தீவிரவாதத்துக்கு மக்கள் பயப்படுவது இன்னமும் அதிகரிக்கத்தான் செய்யும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger