Thursday, June 10, 2010

இங்கிலாந்து குடியுரிமை

 இங்கிலாந்து நாட்டின் மாப்பிள்ளையாக அல்லது மருமகளாக குடியேற வேண்டுமானால் ஆங்கில மொழியில் தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் என்று அந்நாட்டு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இதன் மூலம், திருமண வழியில் இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கால் பங்காக குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.
இங்கிலாந்தில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற்று வசிக்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டது. அதில் இந்தியர்கள் 50 ஆயிரத்துக்கு மேல். இப்படி குடியுரிமை பெறுபவர்கள் சொந்த நாட்டில் பெண்ணோ மாப்பிள்ளையோ பார்த்து மணமுடித்து அந்த துணைக்கும் குடியுரிமை வாங்கி இங்கிலாந்தில் செட்டிலாகின்றனர். இதில் அரசு தாராளமாக நடந்துகொள்வதால், மோசடி அதிகரித்துள்ளது. வாழ்க்கைத்துணை என்ற பெயரில் சம்பந்தமில்லாத யாரையாவது அழைத்து வந்து விடுகிறார்கள். அப்படி வருபவர்கள் ஆங்கிலம் தெரியாமலும், இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை முறை புரியாமலும் செயல்படுவதால் பிரச்னைகள் எழுகின்றன. அதற்கு முடிவு கட்ட புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலைக்காக அங்கு வருபவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படை தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் என்ற விதிமுறை பலகாலமாக இருக்கிறது. ஆரம்ப பள்ளி மாணவன் எழுதுவது மாதிரியான அடிப்படை ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வு அது. இப்போது, குடியுரிமை கோரும் அனைவருக்கும் அதை விரிவுபடுத்தியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இன்னொரு தேர்வு எழுதி பாஸ் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் குடியுரிமை வழங்கப்படும். கலாசார ரீதியில் தேசிய நீரோட்டத்தில் கலக்கவும், அனைத்து பிரிவினர் இடையே ஒற்றுமையை வளர்க்கவும் ஆங்கில அறிவு உதவும் என்று அரசு கூறுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக மும்பையில் குடியேறுபவர்கள் அந்த நகரை பற்றி அக்கறை இல்லாமலும் மராத்தி கற்றுக் கொள்ளாமலும் வாழ்வதால் நகரின் கலாசாரம் சீரழிகிறது, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று சிவசேனா சொல்கிறது. குடியேற்றம் அதிகமுள்ள பெருநகரங்கள் மற்றும் நாடுகளில் இதே கருத்து ஓங்கி ஒலிக்கிறது. முறைகேட்டை தடுக்க என காரணம் சொன்னாலும், இங்கிலாந்தின் நிபந்தனை அதன் பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger