உகாண்டாவின் கம்பாலா நகரில் ஒரு மாநாடு தொடங்கியிருக்கிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எப்படி வலுப்படுத்துவது என்று அதில் ஆலோசனை நடக்கிறது. 10 நாள் நடக்கும் மாநாட்டில் 112 நாடுகள் சார்பில் அரசு பிரதிநிதிகளும், மனித உரிமை குழுக்களின் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ளது. போர் குற்றங்கள், ஒரு இனத்தை அழிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் கொலைகள், மனித சமுதாயத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் செயல்கள் ஆகியவற்றை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. 140 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இப்போது இத்தகைய குற்றங்கள் நடக்கும்போது உள்ளூர் அளவிலான தற்காலிக தீர்ப்பாயங்கள் அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு, அதிரடி முன்தாக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் குற்றங்களாக அறிவிப்பது குறித்து கம்பாலா மாநாடு விவாதிக்கும். ஒருவேளை அது ஏற்கப்படுமானால், பலம் வாய்ந்த பல நாட்டு அரசுகளும் தலைவர்களும் தளபதிகளும் ஹேக் கோர்ட்டில் ஆஜராகி கூண்டில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், எந்த நல்ல விஷயமும் சுலபத்தில் நடந்து விடுவதில்லை என்பதால் வல்லரசுகள் இப்போதைக்கு கவலை கொள்ளவில்லை.
இன அழிப்பு, போர் குற்றங்கள் உலகில் எங்காவது நடந்த வண்ணம் இருக்கின்றன. சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் ஒட்டமான் அரசு லட்சக்கணக்கான ஆர்மீனியர்களை கொன்றது. ஹிட்லரின் ஜெர்மன் அரசு வேட்டையாடி கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை கோடிக்கு மேல். ஆப்ரிக்க நாடுகளை சுரண்ட ஆக்கிரமித்த வெள்ளையர் அரசுகள் சொந்த மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களை கொன்று குவித்தன. கம்போடியா, யூகோஸ்லாவியா, பாலஸ்தீன், ருவாண்டா என பரவலாக இக்குற்றங்கள் தொடர்ந்தன. நாஜி குற்றவாளிகள் தவிர ஏனையவற்றில் வல்லரசுகள் தலையிட்டு தடுக்கவும் இல்லை; பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் உதவவில்லை.
முழு அளவில் செயல்படும் அமைப்பாக மாற இந்த மாநாடு உதவும் என ஐ.நா.செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அது பலித்தால் மனித நாகரிகம் அடுத்த கட்டத்துக்கு செல்ல தகுதி பெறும்.
0 comments:
Post a Comment