Friday, June 25, 2010

அதிபர் ஒபாமா

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் படைகளுக்கு தலைமை வகித்த தளபதியை டிஸ்மிஸ் செய்திருக்கிறார் அதிபர் ஒபாமா.
தளபதி ஸ்டான்லி மெக் கிரிஸ்டல் மிகவும் பிரபலமானவர். ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது தன்னிலை மறந்து, ஒபாமாவையும் அவரது அமைச்சர்களையும் துப்பு கெட்டவர்கள் என்று விமர்சனம் செய்துவிட்டார். ‘என்னை கிண்டல் செய்ததால் கோபமில்லை; மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு ராணுவம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக நடைமுறையை மெக் கிரிஸ்டல் பலவீனப்படுத்தி விட்டார்’ என்று ஒபாமா கூறியிருக்கிறார்.
தன்னம்பிக்கை மிகுந்த அதிபராக இருந்தால், தளபதிக்கு பகிரங்கமாக டோஸ் விட்டு, ‘இனிமேல் வாயை பொத்திக் கொண்டு வேலையை மட்டும் பார்’ என சொல்லியிருப்பார் என்று சிலர் கருதுகின்றனர். ‘மிகச் சிறந்த செயல் வீரரான கிரிஸ்டலுக்கு நா காக்க தெரியவில்லையே’ என சிலர் அனுதாபம் தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்காவுக்கு மற்றொரு வியட்னாமாக மாறுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
ஆப்கனில் அமெரிக்க படைகள் சண்டை போடுவதை ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா விரும்பவில்லை. அதனால்தான் அதிபரானதும் அங்கிருந்த தளபதி டேவிட் மெக் கைர்னனை தூக்கினார். அவருக்கு முந்தைய தளபதி வில்லியம் ஃபாலனை அதிகப்பிரசங்கி என முத்திரை குத்தி ஜார்ஜ் புஷ் நீக்கினார்.
உலக போலீஸ்காரன் பொறுப்பை விரும்பி சுமப்பதால் அமெரிக்க அரசின் ராணுவ செலவு எகிறுகிறது. வீரர்களின் தேவை அதிகரிக்கிறது. கணக்கில்லாமல் பணம் புழங்குவதால் ராணுவ தலைமையகம் பென்டகனின் மவுசு கூடுகிறது. தளபதிகளின் செல்வாக்கு கொடி பறக்கிறது. புகழ் போதை தலைக்கேறி, ‘பதவியை துறந்து ரிபப்ளிகன் பார்ட்டியில் சேர்ந்து அதிபர் பதவிக்கு போட்டியிடலாம்’ என்று கனவு காண்கின்றனர். இதனால் யூனிஃபார்ம் போடாத அதிபர், அமைச்சர்கள், எம்.பி.க்களை மட்டமாக பார்க்கத் தோன்றுகிறது.
இந்த சூழ்நிலை ஏற்பட்டதால்தான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஜனநாயகத்தை இழந்து ராணுவ சர்வாதிகாரிகள் கையில் சிக்கின. அந்த வகையில் மக்களாட்சியில் ராணுவத்தின் இடத்தை மறுபடியும் வட்டமிட்டு காட்டியிருக்கிறார் ஒபாமா.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger