கிரிக்கெட் உள்பட எல்லா விளையாட்டுகளிலும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று டெல்லி நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின. அப்போது, இந்தப் போட்டியின் முடிவு தொடர்பாக சூதாட்டம் நடத்தியதாக பிரஷாந்த் குமார் மாலிக், விக்கி குரோவர் ஆகியோரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், டெல்லி போலீசின் சூதாட்ட தடுப்பு சட்டப்படி இரண்டு பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
இதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவரும் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி தர்மேஷ் சர்மா கூறியதாவது:
கிரிக்கெட் மட்டுமின்றி பல விளையாட்டுகளிலும் சட்ட விரோதமாக சூதாட்டங்கள், உலகம் முழுவதும் நடக்கிறது. இதில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இந்தப் பணம், தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல் பேர்வழிகளிடம் சிக்கி, நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அங்கீகாரம் செய்து விடலாம்.
அப்படி செய்வதால், பணம் பரிமாற்றம் பற்றி அரசு எளிதாக கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் நிதியை மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதனால், ஆன்லைன் அல்லது வேறு எந்த வழியிலும் விளையாட்டில் சூதாட்டம் நடப்பதை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது 25 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மட்டும் 3 ஆயிரம் சூதாட்டம் புரோக்கர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் எந்த இடத்தில் பரப்பரப்பான விளையாட்டு போட்டி நடந்தாலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போலீசுக்கு தெரியாமல் இது நடக்க முடியாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதால்தான் சூதாட்டம் தொடர்ந்து நடக்கிறது. அதனால், சூதாட்டத்துக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்குவதுதான் ஒரே வழி.
0 comments:
Post a Comment