ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சீன அரசு மறுத்திருக்கிறது.
பாதகமான செய்தி வரும்போது மறுப்பறிக்கை தருவதற்காக எல்லா அரசாங்கத்திலும் அதிகாரிகள் இருக்கிறார்கள். மறுப்புகள் ஒரே மாதிரி இருப்பதை தீவிர வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். செய்தி ஆதாரமற்றது; உள்நோக்கம் கொண்டது என பொதுவான வாசகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். சீன மறுப்பு சற்று மாறுதல்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் நெடுஞ்சாலையும் தண்டவாளமும் அமைக்கும் பணியில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஏற்கனவே அதில் ஒரு பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் தானமாக கொடுத்திருக்கிறது. அதில் கரகோரம் நெடுஞ்சாலையை சீனா அமைத்துள்ளது. அதை நீட்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் எல்லை வரையிலும் போட்டால், வளைகுடா நாடுகளுடன் சீனாவுக்கு ஷார்ட் கட் கிடைத்துவிடும். ஆப்கானிஸ்தானையும் தொடமுடியும்.
வரைபடத்தை பார்த்தால் இது நமக்கு எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது புரியும். நேபாளத்தில் மாவோயிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி தன்வசப்படுத்தும் திட்டத்தில் சீனா முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், காஷ்மீரிலும் அதன் தடம் பதியுமானால் இந்தியாவை நிலரீதியாக சுற்றி வளைத்ததாகி விடும். இன்றைய தேதியில் 11 ஆயிரம் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரகசியமாக இயங்கி வருவதாகவும், யாரும் அங்கு செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியுலகத்துக்கு தெரியவில்லை என்றும் உளவு தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை எழுதியிருக்கிறது. ‘அந்த பகுதியில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, மருந்துகளை வேறுவழியாக கொண்டு செல்ல முடியாது. எனவே, அருகில் இருக்கும் நாங்கள் உதவ பாகிஸ்தான் கேட்டது. அதற்கு ஆட்களை அனுப்பினோம்’ என்று சீனா கூறியிருக்கிறது. பாகிஸ்தான் அறிக்கை அதை ஆமோதிக்கிறது.
இந்தியாவுடன் நல்லுறவை கெடுக்க யாரோ செய்யும் சதி என்றும் அமெரிக்க செய்தியை சீனா வர்ணித்திருப்பது எதிர்பாராத விமர்சனம். இருந்தாலும், சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதை சீனாவுக்கு யார் சொல்வது?
0 comments:
Post a Comment