Tuesday, September 7, 2010

வெளிநாட்டு மோகம்

 வெளிநாடுகளில் வேலைக்கு போகும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கண்ணில் நீரை வரவழைக்கும். ஏற்கனவே, குடும்பத்தை பிரிந்து நல்லது, கெட்டதுக்குகூட வரமுடியாமல் போன் மூலமே பேசிக்கொள்ளும் சோகம் போதாது என்றால், சொன்னபடி தராமல் குறைந்த சம்பளம் தருவது, சாப்பாடுகூட போடாமல் கொடுமைப்படுத்துவது என பல வேதனைகளை அனுபவிக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். இருவரது சோகமும் ஒரே மாதிரியானது. ஒருவர் திருவாரூரை சேர்ந்த பெண். வீட்டு வேலை செய்வதற்கு கோலாலம்பூருக்கு சென்றிருக்கிறார். குறைந்த சம்பளம். 18 மணி நேரம் வேலை. வேளாவேளைக்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். வேலை பார்த்தது போதும்.. விட்டா ஊருக்கு போய்விடலாம் என்ற முடிவில் பாஸ்போர்ட்டை கேட்டிருக்கிறார். ஆனால் வேலை பார்த்த இடத்தில் இரண்டு வருடம் கழித்துதான் தருவோம் என்று கூறியிருக்கிறார்கள். அங்குள்ள ஏஜென்ட்களை அணுகி போலி பாஸ்போர்ட்டில் தாயகம் திரும்பியிருக்கிறார்.
இன்னொருவர், நாகப்பட்டினத்தை சேர்ந்த காஜாமொய்தீன். மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றிருக்கிறார். வேலை பிடிக்கவில்லை. இவருக்கும் வேலை பார்த்த இடத்தில் பாஸ்போர்ட் தரவில்லை. போலி பாஸ்போர்ட்டில் திரும்பியவர் சிக்கிவிட்டார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். வீட்டு வேலை, கட்டிட வேலை, டிரைவர் வேலை என குறைந்த சம்பளத்தில் இருக்கிறார்கள். பாஸ்போர்ட்டை வேலை பார்க்கும் இடத்தில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாமல் ஊர் திரும்பக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. பல நேரங்களில் டிரைவர் வேலைக்கு போனவர்கள் 55 டிகிரி பாலைவன வெயிலில் ஒட்டகம் மேய்ப்பதை பார்க்கலாம்.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பிரச்னையை அங்குள்ள அந்தந்த நாட்டு தூதரகங்கள்தான் தீர்த்துவைப்பது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய தூதரகம் ரொம்ப மோசம். போதுமான ஊழியர்கள் இல்லை என காரணம் கூறி பிரச்னைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. உதவியும் செய்வதில்லை. அதனால்தான் எப்படியாவது இந்த நரகத்தில் இருந்து தப்பித்தால்போதும் என போலி பாஸ்போர்ட்டில் இந்தியா திரும்புகின்றனர்.
உலகம் முழுவதுமே ஒரு அமெரிக்கனுக்கோ இங்கிலாந்துக்காரனுக்கோ பிரச்னை என்றால் அது அந்த ஊரில் அமளிதுமளியாகும். சம்பந்தப்பட்ட நாட்டை வறுத்தெடுத்து விடுவார்கள். அதுதான் அந்த நாடுகளின் பலம். இந்தியாவுக்கு அந்த பலம் எப்போது வருமோ தெரியவில்லை.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger